``உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் மீட்பு செலவை அரசே ஏற்கும்”-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

#India #M. K. Stalin #Ukraine
``உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் மீட்பு செலவை அரசே ஏற்கும்”-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “ரஷ்ய ராணுவம் நேற்று உக்ரைனுக்குள் புகுந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி பயில்வோர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கிச்த் தவிக்கின்ற சூழ்நிலையை அறிந்து அவர்களை மீட்டுத் தமிழகத்திற்கு அழைத்து வரும் பொருட்டு மாவட்ட, மாநில அளவில் மற்றும் புதுடெல்லியில் தொடர்பு அலுவலகர்களை நியமனம் செய்து உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டை சார்ந்த 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழ்நாடு அரசை தொடர்பு அலுவலர்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் உக்ரைனிலிருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்” என்று கூறப்பட்டுள்ளது.

இவற்றுடன் உதவி எண்கள், மின்னஞ்சல்களும் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உக்ரைனில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 916 பேர் தமிழக அரசை தொடர்பு கொண்டுள்ளனர். 5,000 மாணவர்களை மீட்டுவருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் எனத் தெரிகிறது.

போர் தொடர்பாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள சமீபத்திய தகவலின்படி, 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த 30 ராணுவ கவச வாகனங்களையும் அழித்திருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.